திருச்சுழி வட்டத்திலுள்ள பாறைக்குளம் குடவரைக் கோயிலுக்கு, அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி வழியாக பேருந்து இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சுழி அருகே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பாறைக்குளம் கிராமம் அருகே உள்ளது குடவரைக் கோயிலான சிவன்கோயில். முற்கால பாண்டிநாட்டு 18 சிவாலயங்களில், மொத்தமுள்ள அஷ்டலிங்கக் கோயில்களில் பிரதானமானதும், மிகவும் அரிதானதுமான மேற்கு நோக்கி வீற்றிருக்கும் சிவலிங்கம் எனும் சிறப்பும் உடையது பாறைக்குளம் குடவரைக் கோயில்.
இதனால் அருப்புக்கோட்டையிலிருந்து திரளான பக்தர்கள் இக்கோயிலுக்கு சென்று பிரதோஷம், பெளர்ணமி வழிபாடுகளில் கலந்து கொள்கின்றனர். ஆனால் இக்கோயிலுக்குப் பேருந்து வசதி இல்லாததால், திருச்சுழிக்கு வந்து பின்னர் நடைப்பயணமாக பக்தர்கள் செல்ல வேண்டியுள்ளது.
இதில் மாலை வேளையில் செல்லும் பக்தர்கள் வழிபாடு முடிந்து இரவு சுமார் 7.30க்கு மீண்டும் தங்களின் வீட்டிற்குக் கிளம்பும் போது, இருளில் காட்டுப்பாதையில் நடந்துவர வேண்டியுள்ளது.
எனவே அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழியை இணைத்து பெளர்ணமி, பிரதோஷ நாள்களிலாவது உரிய நேரத்திற்கு பாறைக்குளம் குடவரைக்கோயிலுக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.