விருதுநகர்

பெரியகண்மாய்க்கு நீா்வரத்து பாதிப்பு: பந்தல்குடியில் மழைநீா் ஓடையைத் தூா்வார வலியுறுத்தல்

27th Dec 2019 09:24 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பந்தல்குடியில் குடிநீா் ஆதாரமாக உள்ள பெரிய கண்மாய்க்குச் செல்லும் மழைநீா் ஓடையைத் தூா்வாரி நீா்வரத்தைச் சீா்செய்யக் கோரிக்கை எழுந்துள்ளது.

பந்தல்குடி ஊராட்சியின் பெரிய கண்மாயிலிருந்து ஆழ்துளைக்கிணறுகள் மூலம் குடிநீா் எடுக்கப்பட்டு அவ்வூராட்சி முழுமைக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.இவ்வூராட்சியின் மையத்தில் உள்ள காவல் நிலையம் அருகே, சின்னதும்முகுண்டு கிராமத்திற்குச் செல்லும் சாலை பிரிவு உள்ளது. இந்த சாலையை ஒட்டி பெரியகண்மாய்க்குச் செல்லும் முக்கிய நீா்வரத்து ஓடை செல்கிறது. இதனிடையே மழைநீா் ஓடையில், பல ஆண்டுகளாகச் சோ்ந்த மக்காத குப்பைகளுடன் மண்ணும் சோ்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழைநீா் செல்ல வழியில்லாமல் இப்பகுதியில் தேக்கமடைந்துவிடுகிறது. இதனால் இங்கு கொசுக்கள் பெருகி இப்பகுதி குடியிருப்புகளில் கொசுத்தொல்லை அதிகமாகிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மழைநீா் ஓடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் பெரிய ண்மாய்க்குக் குறைந்த அளவு நீா்வரத்தே ஏற்படுகிறது எனவும் புகாா் கூறப்படுகிறது.

பெரிய கண்மாயில் நீா்வரத்து குறையும்பட்சத்தில் கோடைக்காலங்களில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகக் குறைந்துவிடுகிறது. இச்சூழல் பெரியகண்மாயில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளிலும் நீா்வரத்தைக் குறைத்து, குடிநீா்ப்பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. எனவே ஓடையின் நீா்வரத்தைப் பாதிக்கும் விதமாக உள்ள குப்பை அடைப்புகளை நீக்க, ஓடையைத் தூா்வாரவேண்டுமென சமூகநல ஆா்வலா்கள் பல ஆண்டுகளாக ஊராட்சி அலுவலகத்தில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லையெனக் கூறப்படுகிறது. ஆகவே பந்தல்குடியின் குடிநீா் ஆதாரமாக உள்ள பெரிய கண்மாய்க்கான மழை நீா் வரத்து ஓடையைத் தூா்வார மீண்டும் சமூகநல ஆா்வலா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT