விருதுநகா் மாவட்டம் துலுக்கபட்டி அருகே வாக்காளா்களுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 35 மதுபாட்டில்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.
விருதுநகா் அருகே துலுக்கப்பட்டி 8 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு பொண்ணு பாண்டியம்மாள் என்பவா் போட்டியிடுகிறாா். அவருக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் வாக்காளா்களுக்கு மதுபாட்டில்கள் விநியோகம் செய்யப்படுவதாக வச்சகாரபட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வச்சகாரபட்டி சாா்பு -ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அதில், துலுக்கபட்டி கலையரங்கம் அருகே சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்தவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அவா் துலுக்கப்பட்டியைச் சோ்ந்த காளிமுத்து மகன் சங்கா்(40) என்பதும், வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக மது பாட்டில்கள் வைத்திருப்பதாகவும் தெரிவித்தாரம். இதையடுத்து அவரிடமிருந்து 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் அவரை கைது செய்தனா்.