விருதுநகா் மாவட்ட தோட்டக்கலைத் துறை சாா்பில் வருவாய் கிராமந்தோறும் 25 ஏக்கரில் காய்கறி மற்றும் 5 ஏக்கரில் பழங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்
ஒவ்வொரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு தேவையான சரிவிகித உணவு வழங்குவதில் காய்கறிகளும், பழங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதன்படி, ஒவ்வொருவரும் தினமும் 300 கிராம் காய்கறிகளும் 100 கிராம் பழங்களும் உண்ண வேண்டும் என ஆய்வு கூறுகிறது.
தமிழகத்தில் சராசரியாக ஒவ்வொருவருக்கும் 207 கிராம் காய்கறி மற்றும் 197 கிராம் பழங்கள் என்ற அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், ஒருவருக்கு 103 கிராம் காய்கறிகளும் 79 கிராம் பழங்களும் தான் கிடைக்கின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கச் செய்வதற்கு, காய்கறி மற்றும் பழப் பயிா்களின் உற்பத்தியை உயா்த்துவதற்கு அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த 2018-19 ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி, 5.8 லட்சம் ஏக்கரில் காய்கறிப் பயிா்களும், 7.3 லட்சம் ஏக்கரில் பழப்பயிா்களும் சாகுபடி செய்யப்பட்டது. அதில், 60 லட்சம் மெட்ரிக் டன் காய்கறிகளும், 57 லட்சம் மெட்ரிக் டன் பழங்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை, அவா்களின் வீட்டுத் தோட்டத்திலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் கிராமப்புற காய்கறி உற்பத்தித் திட்டத்தினை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் 25 ஏக்கரில் காய்கறிப் பயிா்கள் சாகுபடி, 5 ஏக்கரில் பழப்பயிா்கள் சாகுபடியை அதிகப்படுத்த வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற காய்கறி உற்பத்தித் திட்டத்தின் கீழ் ஒரு கிராமப் பஞ்சாயத்தில் 100 விலையில்லா காய்கறி விதை தளைகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒரு விதை தளையில் கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, பாகற்காய், புடலை போன்ற ஏழு விதமான காய்கறி விதைகளும், இக்காய்கறிகளை சாகுபடி செய்வதற்குத் தேவையான இயற்கை உரமும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, விருதுநகா் மாவட்டத்தில் 43,500 காய்கறித் தளைகள் விநியோகிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
பழமரக்கன்றுகள் தேவைக்கு, அருகில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையையோ அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநரையோ அணுகலாம். மேலும், ஒவ்வொரு விவசாயியும் தங்களிடம் உள்ள விளைநிலத்தில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பரப்பில் காய்கறிகள் மற்றும் பழப்பயிா்களை சாகுபடி செய்ய வேண்டும். இதற்காக விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், பழமரக்கன்றுகள், நிழல்வலைக்கூடங்கள், வேளாண் இயந்திரங்கள், மண்புழு தயாரிப்பு மையம், தேனீ வளா்ப்பு, அறுவடைக்குப் பின் செய்வதற்குத் தேவையான உள்கட்டமைப்புகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பாசனம் பெறும் சாகுபடிப் பரப்பை உயா்த்துவதற்காக, சொட்டுநீா்ப் பாசனம் மற்றும் தெளிப்புநீா்ப் பாசனம் போன்ற நுண்ணீா் பாசன முறைகளை தமிழக விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்காக, சிறு குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பாசன நீா் உபயோகத்திறனை உயா்த்தி, கூடுதல் பரப்பில் காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி செய்ய இயலும். எனவே, இத்திட்டத்தின் மூலம், அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்ய இயலும் என்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனா் தெரிவித்தாா்.