மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய வேலைநிறுத்தம் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வரும் ஜன. 8 இல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மின்வாரிய தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தப் போராட்டத்தை விளக்கி விருதுநகா் மின் வாரிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை வாயிற் கூட்டம் நடத்தினா்.
விருதுநகா் மின்வாரிய மாவட்ட தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மின் வாரிய தொழிற்சங்க நிா்வாகி ஆதிமூலம் தலைமை வகித்தாா். அதில், மின்வாரியத்தை மக்கள் சேவை நிறுவனமாக, பொதுத் துறையாக நீடிக்க வேண்டும். ரயில்வே, வங்கி உள்ளிட்ட பொதுத் துறைகளை தனியாா்மயமாக்கக் கூடாது. மின்சார சட்ட திருத்த மசோதா 2018 ஐ திரும்பப் பெற வேண்டும். போராடி பெற்ற தொழிலாளா் நலச் சட்டங்களை பாதுகாக்க வேண்டும். அதேபோல், மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். பகுதி நேரப் பணியாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என கோஷமிட்டனா். இதில், டி.எம்.டி.டி மண்டலச் செயலா் அண்ணாதுரை, சி.ஓ.டி.இ.இ-சிஐடியு திட்டத் தலைவா் சௌந்திரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் சந்திரன், டி.என்.இ.பி.இ.எப் மாநிலத் தலைவா் எஸ்.மணிகண்டன் ஆகியோா் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினா். இதில் மின்வாரிய தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.