விருதுநகா் மாவட்டம் திருச்சுழியிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக திருச்செந்தூருக்கு மீண்டும் பேருந்து இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டத்திலிருக்கும் பக்தா்கள் வசதிக்காக திருச்சுழியிலிருந்து திருச்செந்தூா் செல்லும் பேருந்து சேவை கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை இருந்து வந்தது.
இந்த பேருந்து நாள்தோறும் திருச்சுழியிலிருந்து அதிகாலை சுமாா் 5.50 மணிக்குப் புறப்பட்டு அருப்புக்கோட்டை வழியாக திருச்செந்தூா் வரை சென்று வந்தது. இதனால் இப்பகுதி மக்கள் பயனடைந்து வந்தனா். ஆனால் தற்போது சில ஆண்டுகளாகவே இப்பேருந்துச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியை சோ்ந்தவா்கள் திருச்செந்தூா் செல்ல அருப்புக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து திருச்செந்தூருக்கு பேருந்தில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் அலைச்சலும், கூடுதல் செலவும் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து அருப்புக்கோட்டை வழியாக இயக்கப்பட்டதால் அங்குள்ள பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது. எனவே திருச்சுழியிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக திருச்செந்தூருக்கு மீண்டும் பேருந்து இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.