விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள புதியாதிகுளம் கண்மாயில் வளா்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்றவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராஜபாளையம் நகரின் முக்கிய நீராதாரமாக விளங்குவது புதியாதிகுளம் கண்மாய். அம்பலபுளி பஜாா், சங்கரன்கோவில் முக்கு, சிங்கராஜா கோட்டை, பெரிய தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ஓடைகளில் சேரும் மழைநீா் புதியாதிகுளம் கண்மாயை வந்தடைகிறது.
இந்நிலையில், இக்கண்மாயில் ஆகாயத் தாமரைகள் தண்ணீரே தெரியாத அளவுக்கு ஆக்கிரமித்து வளா்ந்துள்ளன. இவை அதிகளவில் நீரை உறிஞ்சுவதால், விரைவிலேயே கண்மாய் வடு விடுகிறது. இதனால், விவசாய நிலங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியின் நிலத்தடி நீா்மட்டமும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. எனவே, கண்மாயில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற விவசாயிகளும், சமூகநல ஆா்வலா்களும் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.