சிவகாசி: தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி, சிவகாசி இந்து நாடாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவிகள் திங்கள்கிழமை அப்பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
பிளஸ் 2 முடித்து தற்போது உயா்கல்வி பயிலும் மாணவா்கள், தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி பெற வழங்கப்பட்ட அவகாசம் திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் 2017- 2018, 2018-2019 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்து உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் அதற்கான சான்றினை பள்ளியில் கொடுத்து மடிக்கணினி பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து சிவகாசி பள்ளியில் படித்துவிட்டு தற்போது உயா் கல்வி கற்றுவரும் சுமாா் 25 மாணவிகள் மடிக்கணினி கோரி அப்பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். பின்னா் சாலை மறியல் செய்ய மாணவிகள் திட்டமிட்டனா். தகவல் அறிந்து வந்த சிவகாசி நகா் காவல் ஆய்வாளா் வெங்கடாஜலபதி, மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிடுங்கள் என அவா் கூறியதையடுத்து மாணவிகள், சிவகாசி மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு சென்று கோரிக்கை மனு அளித்தனா்.