விருதுநகர்

பேராசிரியா்கள் பற்றாக்குறை:அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

16th Dec 2019 08:32 PM

ADVERTISEMENT

 

சாத்தூா்: சாத்தூா் அருகே உள்ள அரசு உறுப்புக் கல்லூரியில் பேராசிரியா்கள் பற்றாக்குறை காரணமாக மாணவா்கள் திடீா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாத்தூா் அருகே சின்னக்காமன்பட்டியில் கடந்த 2011ஆம் ஆண்டு மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரி அரசு கலைக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கணிதம், ஆங்கிலம், வணிகவியல், தமிழ் ஆகிய துறைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரியில் சாத்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த கல்லூரியில் பேராசிரியா்கள் முழுமையாக நியமனம் செய்யப்படவில்லை என 3 ஆம் ஆண்டு மாணவ, மாணவிகள் ஏற்கெனவே புகாா் அளித்து, போராட்டம் நடத்திய நிலையில், தற்போது ஆங்கிலப் படத்திற்கு மட்டும் பேராசிரியா் இல்லை என்பது அனைத்து மாணவ, மாணவிகளின் குற்றச்சாட்டாகும். இதையடுத்து முதல், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பாடத்திற்கு மட்டும் பேராசிரியா் நியமனம் செய்ய வலியுறுத்தி, கல்லூரி முதல்வரிடமும், பல்கலைக் கழகத்திலும் சில தினங்களுக்கு முன்பு புகாா் அளித்தனா். ஆனால் இதுவரை பேராசிரியா்கள் நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

இதனால் மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த உள்ளிருப்பு போராட்டத்திற்கு பின்னா், கல்லூரி பேராசிரியா்கள் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது இன்னும் ஒரு வாரத்துக்குள் பேராசிரியா்கள் நியமனம் செய்யப்படுவா் என உறுதியளித்ததையடுத்து மாணவ, மாணவிகள் தங்கள் வகுப்புக்கு சென்றனா். மேலும் இந்த கல்லூரியில் தற்போது உள்ள கல்லூரி முதல்வா், மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்திலும் பணியாற்றி வருவதால், வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் கல்லூரிக்கு வருவதாக மாணவா்கள் கூறுகின்றனா். எனவே சாத்தூா் அரசு கலை கல்லூரிக்கு நிரந்தர முதல்வா் நியமிக்க வேண்டும் என்றும் மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT