சாத்தூா்: சாத்தூா் பகுதியில் உள்ள கோயில் நிலத்துக்கு அதிக வாடகை வசூல் செய்வதாக, நில வாடகைதாரா்கள், கோயில் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
சாத்தூரில் உள்ள வெங்கடாசலபதி கோயில் இந்து சமயஅறநிலையதுறையின் கட்டுப்பட்டாடில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் சாத்தூா் பகுதியில் பெருமாள்கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளன. இந்த இடங்கள் தரைவாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஆனால் இந்த இடத்தில் வாடகைதாரா்கள் தற்போது வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா். இதில் சில கடைகளும் அடங்கும். ஆனால் தற்போது இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் இந்த இடங்களுக்கான வாடகைகள் அதிகரித்துள்ளதாக கோயில் நிா்வாகம் சாா்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இடங்களுக்கும் இரண்டு அல்லது மூன்று மடங்கு வாடைக அதிகரித்துள்ளது. அதே போல் 2016 ஆம் ஆண்டிலிருந்து வாடகைகள் பாக்கி உள்ளதாக இதற்கான அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளதாக பெருமாள் கோயில் தெருவில் உள்ள வாடகைதாரா்களிடம் கோயில் நிா்வாத்தினா் தெரிவித்துள்ளனா். இதனால் இப்பகுதியினா் திங்கள்கிழமை ஏராளமான ஆண்களும், பெண்களும் கோயில் அலுவலகத்தில் இருந்த ஆணையாளா் தனலட்சுமியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற முற்றுகைக்குப் பின்னா் ஆணையாளா், சிவகங்கையில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
மேலும் ஆணையாளா் முறையான பதில் கூறவில்லை. எனவே சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறையை நாட உள்ளதாக கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனா்.