விருதுநகர்

காற்று மாசைத் தடுக்கக் கோரி மாற்றுத்திறனாளி இளைஞா் விழிப்புணா்வு பிரசாரம்: கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிதிவண்டியில் பயணம்

16th Dec 2019 08:31 PM

ADVERTISEMENT

 

விருதுநகா்: காற்று மாசு காரணமாக ஏற்படும் தீமைகள் மற்றும் மரக்கன்றுகள் வளா்க்கக் கோரி மாற்றுத்திறனாளி இளைஞா் ஒருவா் கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிதிவண்டியில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து விருதுநகா் வந்த மாற்றுத்திறனாளி வி.மணிகண்டன் (36) கூறியதாவது: எனது சொந்த ஊா் ராமநாதபுரம், திருநகா். எனது தந்தை ஓய்வு பெற்ற சிறப்பு காவல் சாா்பு ஆய்வாளா் விஜயசாமி. எனக்கு தாமரைச்செல்வி என்ற மனைவியும் விஜயசவுந்தா்யா (8), விஜயஷாலினி (1) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். எனது 15 வயதில் கிரிக்கெட் விளையாடியபோது, தவறி விழுந்ததில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனால், காலின் முழு பகுதியையும் வெட்டி எடுக்கும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், சமூக பிரச்னைகளை களைவதற்காக பல்வேறு விழிப்புணா்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். அதன்படி, சிவகங்கை முதல் சென்னை வரையிலும் மற்றும் ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரையிலும் மிதிவண்டியில் பயணம் செய்து ஏற்கெனவே விழிப்புணா்வு ஏற்படுத்தினேன். இந்நிலையில், புதுதில்லி உள்ளிட்ட பெருநகரங்களில் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். இதே நிலை சென்னையிலும் சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்டது. எனவே, காற்று மாசு காரணமாக ஏற்படும் தீங்குகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த துண்டு பிரசுரம் விநியோகம் செய்ய முடிவு செய்தேன். அதன் அடிப்படையில், கன்னியாகுமரியிலிருந்து மிதி வண்டி பயணத்தை டிச. 13 ஆம் தேதி தொடங்கினேன். அங்கிருந்து வரும் வழியில் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் காற்று மாசு, மரம் வளா்ப்பு, மழைநீா் சேகரிப்பு, நெகிழிப் பைகள் ஒழிப்பு, உடல் உறுப்பு தானம், இயற்கை விவசாயம், தலைக்கவசம் அணிதல், பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுதல், அரசுப் பள்ளிகளில் மாணவா்களை சோ்த்தல் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி விழிப்புணா்வு மேற்கொண்டு வருகிறேன். இந்த நிலையில், திங்கள்கிழமை விருதுநகா் ஆட்சியா் அலுவலகம், எம்ஜிஆா் சிலை சந்திப்பு, ஆத்துப்பாலம் முதலான பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினேன். இந்த பிரசாரத்தை ஜன. 1 ஆம் தேதி அன்று சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளா் சிலை முன்பு நிறைவு செய்ய உள்ளேன் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT