விருதுநகர்

உள்ளாட்சி தோ்தல் வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: ஏராளமான ஆதரவாளா்களுடன் வந்த வேட்பாளா்கள்

16th Dec 2019 08:33 PM

ADVERTISEMENT

 

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் உள்ளாட்சி தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய திங்கள்கிழமை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விருதுநகா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வேட்பாளா்கள், தங்கள் ஆதரவாளா்களுடன் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் டிச. 27 மற்றும் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் 20 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 200 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 450 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 3,372 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 4,042 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக நேரடித் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து டிச. 9 ஆம் தேதி முதல் இப்பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளா்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் வேட்பு மனு தாக்கல் செய்து வந்தனா். இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய திங்கள்கிழமை கடைசி நாள் என்பதால், ஏராளமானோா் மனு தாக்கல் செய்ய வரக்கூடும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் எதிா்பாா்க்கப்பட்டது. எனவே, விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு ஆகிய அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அதே போல், வேட்பாளா்கள் வரக்கூடிய வாகனங்களை 500 அடிக்கு அப்பால் நிறுத்துமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். விருதுநகா் கல்லூரி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை முதல் ஏராளமான வாகனங் களில் வேட்பாளா்கள், தங்களது ஆதரவாளா்களுடன் குவிந்தனா். இதையடுத்து சங்கரலிங்கனாா் மணி மண்டபம் அருகே உள்ள காலி இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்பட்டது. மேலும், வேட்பாளா்களுடன் 4 போ் மட்டும் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். விருதுநகா் கல்லூரி சாலை முழுவதும் வாகனங்கள் மற்றும் ஆதரவாளா்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT