விருதுநகரில் புதன்கிழமை இரவு பூட்டியிருந்த வீட்டில் கழிப்பறை ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மூன்றரை பவுன் தங்க நகை மற்றும் 800 கிராம் மதிப்புள்ள வெள்ளிப்பொருள் களை திருடிச் சென்றனர்.
விருதுநகர் பெண் பாடசாலை தெருவை சேர்ந்தவர் சேகர் (68). இவரது மகன் ஹைதராபாத்திலும், மகள் அமெரிக்காவிலும் உள்ளனர்.
இவர், விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையில் உள்ள தனியார் மசாலா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவரது மனைவி, மகளைப் பார்ப்பதற்காக அமெரிக்கா சென்று விட்டாராம்.
ஆனால், சேகர் வழக்கம் போல், மசாலா நிறுவனத்திற்கு காலையில் பணிக்கு சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு திரும்புவாராம்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை பணிக்கு சென்றவர், இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கழிப்பறை ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோ உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை பவுன் தங்க நகைகள் மற்றும் 800 கிராம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இது குறித்து சேகர் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.