ராஜபாளையத்தில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தி வருவதாக நகராட்சிக்கு தொடர்ச்சியாக புகார் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து நகர் நல அலுவலர் சரோஜா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சுதாகரன், மாரிமுத்து உள்ளிட்ட குழுவினர் தென்காசி சாலை, பெரிய கடை பஜார், பழைய பேருந்து நிலையம், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இதில் 75 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 5 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது.
பின்னர் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கடைகள், வணிக வளாகம், உணவகங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும். ஒருமுறை பறிமுதல் செய்யப்பட்ட கடையில், மீண்டும் நெகிழிப்பைகள் பயன்படுத்துவது தெரியவந்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனக் கூறினார்.