விருதுநகர்

பெண்ணிடம் நகை பறித்த வழக்கு: சிவகங்கையைச் சேர்ந்த 2 பேர் கைது

30th Aug 2019 08:32 AM

ADVERTISEMENT

விருதுநகர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் சிவகங்கை பகுதியை சேர்ந்த இரண்டு பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.  மேலும், அவர்களிடமிருந்த பதினொன்றரை பவுன் நகைகள் மற்றும் இரு சக்கர வாகனம், கத்தி முதலானவற்றை பறிமுதல் செய்தனர். 
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கூரைக்குண்டு சாலையில் வசிப்பவர் தமிழரசன் மனைவி கிரேஸ்மேரி. இவர் கடந்த ஜூலை 10 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மூன்று பேர் வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்க நகையை பறித்துச் சென்றனராம். இதுகுறித்து சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். 
விசாரணையில் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக மூன்று பேர் வந்து சென்றிருப் பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களது புகைப்படங்களை பழைய குற்றவாளிகள் பட்டியலில் இருந்த படத்துடன் ஒப்பிட்டு பார்த்த போது, அவர்கள் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேலூர் கிராமத்தை சேர்ந்த அழகுபாண்டி (29), வினோத்கண்ணன் (28), களத்தூரை சேர்ந்த அழகர்சாமி (28) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள், மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.  
இதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு சென்ற போலீஸார், அழகுபாண்டி, அழகர்சாமியை கைது செய்து, அவர்களிடமிருந்த பதினொன்றரை பவுன் நகைகள்,  இருசக்கர வாகனம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். 
இவர்கள் மூன்று பேர் மீதும் தமிழகம், புதுச்சேரியில் கொலை வழக்குகளும், கொள்ளை வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அழகுபாண்டி, அழகர்சாமி இருவரும் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள வினோத்கண்ணனை போலீஸார் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT