ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் ஆரோக்கிய இந்தியா திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சிகள் செய்து ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் விளையாட்டு துறை, விருதுநகர் நேரு யுவகேந்திரா சார்பில் ஆரோக்கிய இந்தியா திட்ட தொடக்க விழா மற்றும் தேசிய விளையாட்டு தின விழாவை பல்கலைக்கழக துணைத் தலைவர் சசி ஆனந்த் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் மாவட்ட நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், முகவூர் விளையாட்டு கிளப் செயலர் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசுகையில், இந்திய முன்னாள் ஹாக்கி கேப்டன் தியான்சந்த் பிறந்த தினத்தையொட்டி புதுதில்லியில் பிரதமர் மோடி, ஆரோக்கிய இந்தியா திட்டத்தை தொடங்கியிருப்பது மிகவும் பொருத்தமான ஒன்று. இத்திட்டத்தின் படி மாணவ, மாணவிகள் யோகா, தியானம், உடற்பயிற்சி முதலானவற்றை மேற்கொண்டு ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றனர்.
அதன் பின்னர், ஆரோக்கிய இந்தியா திட்டம் குறித்த உறுதிமொழியை அனைவரும் எடுத்து கொண்டனர். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கருணாநிதி, பல்கலைக்கழக மாணவ நலத் துறை டீன் சிவக்குமார், துணைப் பதிவாளர் குருசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக மற்றும் பாலிடெக்னி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.