விருதுநகர்

வர்த்தக அமைப்புகள் சார்பில் கண்மாய் தூர்வாரும் பணி

29th Aug 2019 09:10 AM

ADVERTISEMENT

சிவகாசியில் வர்த்தக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் கண்மாய் தூர்வாரும் பணி, சாலை சீரமைப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.
சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் 2 பெரிய பள்ளிகள் உள்ளன. அவற்றில் ஒரு பள்ளியில் 5 ஆயிரம் மாணவிகளும், மற்றொரு பள்ளியில் 8 ஆயிரம் மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர். 
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணியை குடிநீர் வடிகால் வாரியத்தினர் மேற்கொண்டனர். இதனால், வெம்பக்கோட்டை சாலை முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும், சாலையில் பல இடங்களில் மேடு, பள்ளங்கள் தோன்றின. சிறிய அளவிலான மழை பெய்தாலும், இச் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி விபத்துகள் ஏற்படத் தொடங்கின. இது குறித்து பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தும், நெடுஞ்சாலைத் துறையினர் சாலை சீரமைக்கும் பணியை மேற்கொள்ளவில்லை எனக்  கூறப்படுகிறது. இதற்கிடையில் அப்பகுதியில் நகராட்சி நிர்வாகத்தினர் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணியையும், சிறு பாலம் அமைக்கும் பணியையும் தொடங்கினர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், சாலை மேலும் பழுதானது. 
இந்நிலையில், சிவகாசியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக அமைப்புக்கள் இணைந்து சிவகாசி பசுமை மன்றம் என்ற  பெயரில் சிவகாசி பெரியகுளம் கண்மாய் தூர்வாரும் பணியையும், நீர்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, இச் சாலையில் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் மேடு, பள்ளங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் பசுமை மன்றத்தினர் புதன்கிழமை சீரமைத்தனர்.
இது குறித்து அதன் தலைவர் சுரேஷ்தர்ஹர் கூறியது:
இச் சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், தினமும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தற்காலிக ஏற்பாடாக சாலையில் உள்ள மேடு பள்ளங்களை சீரமைக்கிறோம் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT