விருதுநகர்

சாத்தூர் அருகே மக்கள்  தொடர்பு திட்ட முகாம்

29th Aug 2019 09:13 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் காளிமுத்து தலைமை வகித்தார். வட்டாட்சியர் செந்திவேல் முன்னிலை வகித்தார்.
இதில் தோட்டக் கலைத் துறை, வேளாண்மைத் துறை சார்பில் பல்வேறு நலத் திட்டங்கள், விவசாயிகள் பயன்பெறும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் வருவாய்த் துறை சார்பில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உழவர் அட்டைகள், ஆதரவற்ற விதவைகள் சான்று, விபத்து நிவாரணம் உள்ளிட்ட 11 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை கோட்டாட்சியர் காளிமுத்து வழங்கினார். 
மேலும் முதியோர் உதவி தொகை, குடும்ப அட்டை, உழவர் அட்டை குறித்து பல்வேறு பயனாளிகள் மனு அளித்தனர். இதில் அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் வருவாய்த் துறை, தோட்டக் கலைத் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
முன்னதாக ஒ.மேட்டுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பாக கோட்டாட்சியர் காளிமுத்து, வட்டாட்சியர் செந்திவேல், அதிமுக ஒன்றியச் செயலாளர் சண்முக்கனி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT