விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை யில் சேதமடைந்துள்ள தெருமின்விளக்குகளை சீரமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை 27ஆவது வார்டு திருநகரம் பகுதியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இத்தெருக்களில் பொன்னுச்சாமிபுரம் தெரு, தனியார் பள்ளி உள்ள சிதம்பர ராஜபுரம் தெரு உள்ளிட்ட பல தெருக்களிலும் மின்கம்பங்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப் பட்டவை. இவற்றின் அடிப்பாகம் சேதமடைந்துள்ளதாக ஏற்கெனவே புகார் எழுந்துள்ளது.
இந் நிலையில், சுமார் 5-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களில் தெருமின்விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. அத்துடன் அவற்றை மின்கம்பத்துடன் இணைக்கும் இரும்புக் குழாய்களும், மின் கம்பிகளும் சேதமடைந்துள்ளதால் விளக்குகள் கீழே விழும் அபாயத்தில் உள்ளன.
எனவே இவற்றை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.