ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு கண்மாய் கரையில் ரேஷன் கடை ஊழியர் கழுத்தறுப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானத்தை சேர்ந்தவர் கருப்பையா (56). இவர் முகவூரில் உள்ள ரேஷன் கடையில் காசாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை தேவதானம் மருது விநாயகர் கோயில் அருகே உள்ள தனது வயலுக்கு செல்வதாகக் கூறி சென்றவர், பிரம்மா குளம் கண்மாய் கரையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தேவதானம் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்த கருப்பையாவின் உறவினர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கருப்பையா கொலைக்கான காரணம், குற்றவாளிகள் யார் என்று தேவதானம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.