விருதுநகர்

பந்தல்குடி நாச்சியார் ஊருணியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு

28th Aug 2019 09:02 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் பந்தல்குடியில் உள்ள நாச்சியார் ஊருணியில் பொதுமக்கள் குப்பைகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் தொற்று அபாயம் நிலவுகிறது. 
பந்தல்குடி ஊராட்சியின் முதலாவது பேருந்து நிறுத்தமான லிங்காபுரம் அருகே சாலையோரம் நாச்சியார் ஊருணி உள்ளது. இப்பகுதியின் பிரதான நிலத்தடி நீராதாரமாக உள்ள இந்த ஊருணியை பொதுமக்கள் குப்பை கொட்டும் இடமாக மாற்றிவிட்டனர். சிலர் கோழி இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. மேலும், வியாபாரக் கடைகளின் மக்கும், மக்காத குப்பைகளும் கொட்டப்படுகின்றன. இதனால், ஊருணி முழுவதும் சுகாதாரக் கேடு நிலவுவதுடன், துர்நாற்றம் வீசி பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்படுகிறது.
இது சம்பந்தமாக, ஊராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தும், பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தவில்லை. 
எனவே, இப்பகுதியில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைத்து, குப்பைகளை தினமும் சேகரிப்பதுடன், ஊருணியைச் சுற்றிலும் வேலி அமைத்து, குப்பை கொட்டுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT