சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் உள்ள கழிப்பறையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி சார்பில் முக்குராந்தல், நகராட்சி காலனி அருகே 2 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. காய்கறிச் சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் பொதுமக்களுக்காக, இந்த 2 இடங்களிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டன.
ஆனால், முக்குராந்தல் பகுதியில் பல நாள்களாக செயல்பட்டு வந்த கழிப்பறை, நகராட்சி நிர்வாகத்தால் சீரமைப்புப் பணிக்காக பூட்டப்பட்டது. ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் கழிப்பறையை சீரமைக்கவில்லை.
இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்து நகர் பகுதிக்கு வரும் பொதுமக்கள் சிறுநீர் கழிப்பதற்கு கூட கழிப்பறை இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து, இப்பகுதி கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் இந்த கழிப்பறையை விரைவில் திறக்க பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி, முக்குராந்தல் பகுதியில் உள்ள நகாரட்சி கழிப்பறையை விரைவில் சீரமைத்து, உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என, சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.