விருதுநகர் அருகே கடம்பன்குளத்தில் சாய்ந்து விழும் அபாய நிலையில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை மாற்றக் கோரி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடம்பன்குளம் ஊருக்குள் நுழையும் பகுதியில் உள்ள மின் கம்பத்தின் காங்கிரீட் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், இந்த கம்பம் எப்போது விழுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் அப்பகுதியில் நடமாடி வருகின்றனர்.
இப்பகுதியில் அடிக்கடி பொதுமக்கள் வாகனத்திலும், பள்ளி மாணவ, மாணவியர் நடந்தும் சென்று வருகின்றனர். மேலும், அப்பகுதியில் மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகள் விடப்படுகின்றன. எனவே, சேதமடைந்து அபாய நிலையிலுள்ள மின்கம்பத்தை சீரமைக்க மின் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.