விருதுநகர்

இந்திய அஞ்சல் துறை சார்பில்  மாநில அளவில் கடிதம் எழுதும் போட்டி

28th Aug 2019 09:06 AM

ADVERTISEMENT

இந்திய அஞ்சல் துறை சார்பில், தமிழ்நாடு மாநில அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடைபெற உள்ளது என, விருதுநகர் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் எம். ஸ்ரீராமன் தெரிவித்துள்ளார். 
      இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை சிவகாசியில் கூறியதாவது: 
தற்போது செல்லிடப்பேசி, கட்செவி அஞ்சல் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வந்த பின்னர், உறவினர்களுக்கு கடிதம் எழுதுவது முற்றிலும் நின்றுவிட்டது. 
எனவே, இளைஞர்களிடம் கடிதம் எழுதும் பழக்கம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில், கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது.
      போட்டிக்கான தலைப்பு, "டியர் பாபு யூ ஆர் இம்மார்ட்டல்' (அன்புள்ள பாபு (காந்திஜி) நீங்கள் இறவாதவர்) ஆகும்.
      18 வயது வரையிலானவர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இன்லாண்ட் லெட்டர் பிரிவு, என்வெலப் பிரிவு ஆகிய இரு பிரிவாக போட்டிகள் நடைபெறும். 
 என்வெலப் போட்டியில் கலந்துகொள்பவர்கள் ஏ-4 அளவிலான வெள்ளை காகிதத்தில் ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் கையால் எழுதவேண்டும். இன்லாண்ட் லெட்டர் பிரிவில் எழுதுபவர்கள், அஞ்சல் நிலையத்தில் விற்பனை செய்யப்படும் இன்லாண்ட் லெட்டரை வாங்கி, அதில் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதவேண்டும்.
       இரு பிரிவுகளில் எந்தப் பிரிவு போட்டியில் கலந்துகொள்கிறீர்கள் என்ற விவரம் தெரிய, கடிதத்தின் மேல் பகுதியில் 18 வயதுக்கு கீழ், 18 வயதுக்கு மேல் என சான்றழிக்கிறேன் என எழுதவேண்டும். மேலும், அஞ்சல் துறை கடிதப் போட்டி எனவும் குறிப்பிட வேண்டும்.
     போட்டிக்கான கடிதங்களை, 30.11.2019ஆம் தேதிக்குள், முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை-600 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
     இதில், முதல் பரிசு ரூ. 25 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 10 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 5 ஆயிரமாகும். 
 இது குறித்த மேலும் விவரங்களுக்கு, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT