விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம் மற்றும் காரியாபட்டி ஒன்றியப் பகுதிகளில் மானாவாரி நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நரிக்குடி ஒன்றியத்தில் எருமைக்குளம், எழுவணி உள்ளிட்ட 13 கிராமங்களில் நபார்டு மற்றும் தமிழ்நாடு நீர் செறிவு மேம்பாட்டு முகமை நிதியுதவியுடன், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சீட்ஸ் தொண்டு நிறுவனமானது மானாவாரி நிலங்களில் பண்ணைக்குட்டைகள் மூலம் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின்படி, குறிப்பிட்ட கிராமங்களில் மானாவாரி நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைத்து, வரத்துக் கால்வாய் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டது. மேலும், நீர்வள மேம்பாட்டுக்கான சிறிய அணைக்கட்டுகள் கட்டும் பணியும், விவசாயிகளின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டது. இதனால், நரிக்குடி ஒன்றியத்தில் 1,300 ஹெக்டேர் நிலங்கள் பயன்பெறும்.
அதேபோல், காரியாபட்டி ஒன்றியத்தில் 1,160 ஹெக்டேர் மானாவாரி நிலங்கள் பயன்பெறும் விதமாக, பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டன. கடந்த இரு வாரங்களில் பெய்த மழையால், தற்போது இத்திட்டத்தில் அமைக்கப்பட்ட பண்ணைக்குட்டைகளில் பெரும்பாலானவை நிரம்பியுள்ளன. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், இந்த ஆண்டு மானாவாரி விவசாயிகள் அதிகம் பயன்பெற முடியும் என, அப்பகுதி விவசாயிகள் தன்னம்பிக்கையுடன் கூறினர்.