விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை திருநகரம் பகுதி மாரியம்மன் தெற்குத் தெருவில் உள்ள வாருகாலைச் சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட திருநகரம் பகுதியில் உள்ளது மாரியம்மன் தெற்குத்தெரு. இங்கு, சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இத்தெருவில், பல ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட வாருகால் சேதமடைந்துள்ளதால், கழிவுநீர் வெளியேறி ஆங்காங்கே தேங்குவதுடன், மழைக் காலத்தில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடுகிறது.
இதனால், அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசி நோய் தொற்று அபாயமும் உள்ளது.
இந்த வாருகாலை சீரமைத்து, மீண்டும் பழைய முறைப்படி அருகிலுள்ள மலையரசன் கோயிலை அடுத்துச் செல்லும் கால்வாயில் விடுமாறு, ஊராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இந்த வாருகாலை விரைவில் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.