விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தன்னிடம் நகை மற்றும் பணத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸாரை கண்டித்து, ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு திங்கள்கிழமை முயற்சி செய்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சீனியாபுரம் தெருவை சேர்ந்தவர் சகாயராணி (48). இவருக்கும், கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தற்போது மதுரை கே.புதூரில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில், ஸ்ரீவில்லிபு த்தூரில் குடியிருந்த போது, அருகில் வசித்த மாதவன், அவரது நண்பர் சாத்தூர் வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றும் குமார் ஆகியோர் அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி, சகாயராணியிடம் 5 பவுன் நகையை வாங்கி சென்றனராம்.
அதேபோல், மாதவன், அவரது மனைவி ஜான்சிராணி இருவரும் ஒரு பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணமும் வாங்கினர். இந்நிலையில், அவர்களிடம் நகை மற்றும் பணத்தை தருமாறு கேட்டால், அவர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் சகாயராணி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராஜராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிப்பதற்காக விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு திங்கள்கிழமை சகாயராணி தனது மகனுடன் வந்திருந்தார். அப்போது, பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். இதைக் கண்ட அங்கு அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து சூலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.