விருதுநகர்

தும்முசின்னம்பட்டியில் புதிய வாரச்சந்தை தொடக்கம்

27th Aug 2019 07:34 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தும்முசின்னம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கானாவிலக்கு என்ற இடத்தில் புதிய வாரச் சந்தையை திங்கள்கிழமை விவசாயிகள் தங்கள் ஒருங்கிணைப்பில் உருவாக்கியுள்ளனர்.
 தும்முசின்னம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கானாவிலக்கு வாரச் சந்தையின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவரான நாகராஜ் இதுபற்றி திங்கள்கிழமை கூறியதாவது: எங்கள் கிராமமான தும்முசின்னம்பட்டியில் மயிலி, பிரண்டை, பொன்னாங்கன்னி, சிறுகீரை, கொத்தமல்லிச்செடி, மணித்தக்காளிக் கீரை உள்ளிட்ட பலவித கீரை வகைகளையும், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், மிளகாய் உள்ளிட்ட பலவித காய்கறிகளையும், உளுந்து, கேழ்வரகு, மக்காச்சோளம், பாசிப்பயிறு உள்ளிட்ட பயறுகள், சிறுதானிய வகைகளையும் விவசாயிகள் அதிகம் உற்பத்தி செய்கின்றனர். ஆனால் எங்கள் கிராமத்திலிருந்து கமுதி, அருப்புக்கோட்டை ஆகிய பெரிய ஊர்கள் அதிக தொலைவில் உள்ளதால் பெருமுயற்சியெடுத்து, அதிகம் போக்குவரத்துச் செலவு செய்து சந்தைப்படுத்தி வருகிறோம். இதனால் எங்களுக்கு அதிக அலைச்சலும் உண்டாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு எங்கள் கிராம விவசாயிகள் இணைந்து தும்முசின்னம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கானா விலக்கு எனும் இடத்தில் உள்ள சுமார் ஒரு ஏக்கருக்கும் அதிகம் உள்ள தனியார் இடத்தில் இந்த வாரச்சந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியுள்ளோம் என்றார்.
மேலும் இதுதொடர்பாக இவ்வாரச்சந்தையின் செயலர் ராதா என்பவர் கூறியது: ஒரே இடத்தில் காய்கறிகள், ஆடு, மாடு, கோழிகள் என அனைத்தும் கிடைக்கும் விதமாக இச்சந்தையை அமைத்துள்ளோம். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் சந்தையிலேயே சுமார் 151 விவசாயிகள் கடைகள்அமைத்தனர். இந்த சந்தை அமைக்கப்பட்ட கானாவிலக்கு எனும் இடம் நான்கு முக்கிய ஊர்களுக்குச் செல்லும் பிரதானச்சாலை சந்திப்பில் உள்ளதால், வெளியூரிலிருந்து வரும் வியாபாரிகள் இங்கு பொருள்கள் வாங்க வசதியாக உள்ளது. இச்சந்தைக்கு பசும்பொன் சந்தை எனப்பெயரிட்டுள்ளோம் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT