விருதுநகர்

விருதுநகர் அரசு மதுபானக் கடையில் தீ:  ரூ. 8 லட்சம்  மதுபாட்டில்கள் எரிந்து சேதம்

11th Aug 2019 01:24 AM

ADVERTISEMENT


 விருதுநகர் புல்லலக்கோட்டை நான்கு வழி சாலை அருகே உள்ள அரசு மதுபான கடையில் சனிக் கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து சேதமடைந்தன. 
 விருதுநகர் புல்லலக்கோட்டை நான்கு வழி சாலை விலக்கு பகுதியிலிருந்து அரசு போக்குவரத்து பணிமனைக்கு செல்லும் வழியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்கடையை வழக்கம் போல் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை இரவு  பூட்டிச் சென்றார்களாம். ஆனால், சனிக்கிழமை அதிகாலையில் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ எரிவதை கண்ட ரோந்து போலீஸார்,  தீயணைப்பு துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 
இந்த தீ விபத்தில் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், ஏற்கெனவே விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் ஊழியர்கள் சிலர் ரூ.80 ஆயிரம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்து. இதையடுத்து அக்கடையில் மற்றொரு கடையில் பணி புரிந்த ஊழியர்களை தற்போது பணியில் அமர்த்தியுள்ளனர். இந்நிலையில் இக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, பழைய பேருந்து நிலைய மதுபான கடையில் நடைபெற்ற மோசடி போல், இக் கடையிலும் மோசடி செய்து, அதை மறைப்பதற்காக தீ விபத்து ஏற்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT