விருதுநகர்

மனைவிக்கு கொலை மிரட்டல்: ரயில்வே காவலர் உள்பட 5 பேர் மீது வழக்கு

11th Aug 2019 01:24 AM

ADVERTISEMENT


விருதுநகர் அருகே  இளம்பெண்ணை கொலை செய்து விடுவதாக மிரட்டிய, அவரது கணவரான ரயில்வே காவலர் உள்பட அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனர்.
 விருதுநகர் அருகே செந்நல்குடியை சேர்ந்த சக்தீஸ்வரி (32) என்பவருக்கும், மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த மோகன் ராஜா (35) என்பவருக்கும் கடந்த 2015, நவம்பர் 13 இல் திருமணம் நடைபெற்றுள்ளது. மோகன் ராஜா திருச்சி இருப்பு பாதை ரயில்வே காவல் நிலையத்தில் போலீஸாக பணி புரிந்து வருகிறார். இதையடுத்து, இருவரும் திருச்சி ரயில்வே காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். 
இந்நிலையில், திருமணத்தின் போது சக்தீஸ்வரிக்கு போடப்பட்ட 25 பவுன் நகையை மோகன் ராஜா அடமானம் வைத்து விட்டாராம். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதையடுத்து சக்தீஸ்வரி தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், மோகன்ராஜா, மாமனார் ஒச்சு, மாமியார் கலைச்செல்வி, உறவினர்களான ஹரிப்பிரியா, சவுந்தர்யா ஆகியோர் சக்தீஸ்வரி வீட்டிற்கு வந்து அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனராம். இது குறித்து சக்தீஸ்வரி அளித்த புகாரின் பேரில் விருதுந கர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், மோகன் ராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிந்து  விசாரணை நடத்தி வருகின்றனர். 
ஏற்கெனவே, கடந்த சில நாள்களுக்கு முன்பு விருதுநகர் ரயில்வே காவல் நிலையம் முன்பாக கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சக்தீஸ்வரி தர்னாவில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT