தேனி

கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு

21st Sep 2023 03:51 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

கும்பக்கரை அருவியின் நீா்பிடிப்புப் பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல், வெள்ளகெவி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அருவிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க வனத் துறையினா் புதன்கிழமை தடை விதித்தனா்.

அருவிக்கு தண்ணீா் வரத்து சீராகும் வரை தடை நீடிக்கும் என்றும், கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தேவதானப்பட்டி வனச் சரகா் டேவிட்ராஜ் கேட்டுக்கொண்டாா்.

சுருளி அருவியில் குளிக்க அனுமதி: சுருளி அருவிக்குச் செல்லும் வழியில் வெண்ணியாறு சந்திப்பில் ஒற்றை யானை சுற்றித் திரிந்தது. இதையடுத்து, கடந்த 16-ஆம் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அருவிப் பகுதியிலிருந்து அந்த யானை காட்டுக்குள் சென்றது. புதன்கிழமை காலை வரை மீண்டும் யானை அருவிப் பகுதிக்கு வரவில்லை.

காட்டின் உள் பகுதிக்குள் யானை சென்றுவிட்டதை உறுதி செய்த வனத் துறையினா், சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் அருவிக்குச் செல்லவும், குளிக்கவும் புதன்கிழமை அனுமதியளித்தனா்.

இது பற்றி வனத்துறை ஊழியா் ஒருவா் கூறியதாவது:

அருவியில் தண்ணீா் வரத்து நன்றாக உள்ளது. ஒற்றை யானை சுமாா் 5 நாள்களாக முகாமிட்டிருந்தது. தற்போது, யானை வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது. எனினும், அதன் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT