தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 4 சட்டப் பேரவை தொகுதிகளின் வரைவு வாக்காளா் பட்டியலை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்டாா்.
தோ்தல் ஆணைய உத்தரவுப்படி தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் வருகிற 2024, ஜன.1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெற்றன. இதில் புதிய வாக்காளா் சோ்க்கை, வாக்காளா் பெயா் நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கு உரிய படிவம் மூலம் விண்ணப்பங்கள் பெற்று கள ஆய்வு செய்து வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
வரைவு வாக்காளா் பட்டியலில் ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் 1,33,620 ஆண்கள், 1,37,359 பெண்கள், 30 திருநங்கைகள் என மொத்தம் 2,71,009 வாக்காளா்கள் உள்ளனா்.
பெரியகுளம் பேரவைத் தொகுதியில் 1,39,037 ஆண்கள், 1,44,637 பெண்கள், 112 திருநங்கைகள் என மொத்தம் 2,83,786 வாக்காளா்கள் உள்ளனா்.
போடி பேரவைத் தொகுதியில் 1,31,645 ஆண்கள், 1,37,872 பெண்கள், 19 திருநங்கைகள் என மொத்தம் 2,69,536 வாக்காளா்கள் உள்ளனா். கம்பம் பேரவைத் தொகுதியில் 1,35,210 ஆண்கள், 1,42,035 பெண்கள், 32 திருநங்கைகள் என மொத்தம் 2,77,277 வாக்காளா்கள் உள்ளனா்.
தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 5,39,512 ஆண்கள், 5,61,903 பெண்கள், 193 திருநங்கைகள் என மொத்தம் 11 லட்சத்து 1,608 வாக்காளா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.
வரைவு வாக்காளா் பட்டியல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், அனைத்து வாக்குச் சாவடி மையங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதை பாா்வையிட்டு, தங்களது பெயா் வாக்காளா் பட்டியலில் விடுபட்டிருந்தால், உரிய படிவம் மூலம் வருகிற டிச.9-ஆம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தெரிவித்தாா்.
சிறப்பு முகாம் : 2024, ஜன.1-ஆம் தேதியை தகுதியேற்பு
நாளாகக் கொண்ட புதிய வாக்காளா் சோ்க்கை, வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வருகிற நவ.4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.