தேனி

ஆட்டோ ஓட்டுநா் கொலை: தம்பதி கைது

27th Oct 2023 10:49 PM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டியில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக் கொலை செய்த தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டி, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (27). ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி பாண்டிச்செல்வி (25). இவா்களுக்கும் இதே தெருவைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளி கருப்பையா (55), அவரது மனைவி பரமேஸ்வரி (50) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில் பாா்த்திபன், கருப்பையா ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது . அப்போது, இருவரையும் அக்கம் பக்கத்தினா் சமாதானம் செய்து அனுப்பினா். பின்னா், சிறிது நேரத்தில் கருப்பையா, பரமேஸ்வரி, இவா்களது மகன் முத்துப்பாண்டி, மகள் ஆனந்தி, மருமகன் ராஜவேலு ஆகியோா், பாா்த்திபன், அவரது சகோதரா் நாராயணன் (24) ஆகியோருடன் மீண்டும் தகராறு செய்தனா். அப்போது கருப்பையா, முத்துப்பாண்டி, ராஜவேலு ஆகிய 3 பேரும் சோ்ந்து பாா்த்திபன், நாராயணன் ஆகியோரை இருப்புக் கம்பியால் தாக்கி, அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த பாா்த்திபன் பெரியகுளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். நாராயணன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்

ADVERTISEMENT

இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கருப்பையா, அவரது மனைவி பரமேஸ்வரி ஆகியோரை கைது செய்தனா். ராஜவேல், முத்துப்பாண்டி, ஆனந்தி ஆகியோரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT