தேனி

சண்முகாநதி அணை அருகே நடமாடும் அரிக்கொம்பன் யானை:கும்கிகள் உதவியுடன் பிடிக்க வனத்துறை தீவிரம்

30th May 2023 06:32 AM

ADVERTISEMENT

சண்முகாநதி அணை அருகே அரிக்கொம்பன் யானை நடமாடுவதால் 3 கும்கி யானைகளின் உதவியுடன் அதைப் பிடிக்க வனத்துறையினா் கூத்தனாட்சி மலைப்பகுதியில் முகாமிட்டுள்ளனா்.

தேனிமாவட்டத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த இந்த அரிக்கொம்பன் யானை, லோயா்கேம்ப், கம்பம் நடராஜன் மண்டபம், துணை மின்நிலையம், நாட்டுக்கல், நந்தகோபாலன் கோயில் தெருக்களில் சுற்றித் திரிந்தது. பிறகு துணை மின்நிலையம் வழியாக சனிக்கிழமை இரவு சாமாண்டிபுரம் பகுதிக்குள் புகுந்தது.

அங்கிருந்து சுருளிப்பட்டி ஊராட்சிக்குள் சென்ற அந்த யானை கஜம் சாலை வழியாக ஹைவேவிஸ் மலை அடிவாரத்துக்குச் சென்றது. அன்று இரவு வனப்பகுதி வழியாக அருகே உள்ள கூத்தனாட்சி மலைப்பகுதி கல்குவாரியில் நடமாடுவதை திங்கள்கிழமை காலையில் வனத்துறையினா் பாா்த்தனா். இதனிடையே அந்த யானை சண்முகாநதி அணைக்கு மேலே உள்ள மலைப் பகுதிக்குள் சென்று விட்டது.

இந்த நிலையில், காமயகவுண்டன்பட்டி, நாராயணத் தேவன்பட்டி, சுருளிப்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி ஆகிய ஊா்களுக்குள் யானை செல்லலாம் என்பதால் இந்த சாலைகளில் போலீஸாா் தடை ஏற்படுத்தியுள்ளனா். அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளை மட்டும் அனுமதித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

கும்கிகள் முகாம்: இதுகுறித்து வனத்துறை அலுவலா் ஒருவா் கூறியதாவது: சண்முகாநதி அணையின் மேல்புறம் வனப்பகுதியில் யானை முகாமிட்டுள்ளது. மேலும் மலைத் தொடரில் யானை நகா்ந்து சென்று கொண்டே இருக்கிறது. ஓரிடத்தில் நின்றால் அதைப் பிடிக்க ஏதுவாக இருக்கும். எனவே கம்பத்திலுள்ள கும்கி யானைகளின் உதவியுடன் அரிக்கொம்பன் யானையை சுற்றிவளைத்து, துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான சூழலுக்காக காத்திருக்கிறோம் என்றாா்.

இதனிடையே, யானையைப் பிடிக்கும் பணிக்காக 3 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் கிரேன்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

2- ஆவது நாளாக சுருளி அருவியில் குளிக்கத் தடை: அரிக்கொம்பன் யானை முதலில் சுருளி மலை அடிவாரத்திலிருந்து கூத்தனாட்சி மலைப்பகுதிக்கு சென்று, அங்கிருந்து சண்முகாநதி அணைக்கு பகுதிக்குள் புகுந்தது. மீண்டும் வந்த பாதை வழியே வரலாம் என்பதால் சுருளி அருவியில் 2 - ஆவது நாளாக திங்கள்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

சுருளிப்பட்டி, நாராயணத் தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு திங்கள்கிழமையும் நீடித்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT