தேனி

அரிக்கொம்பன் யானையைப் பிடிக்க 3 கும்கி யானைகள் வரவழைப்பு

29th May 2023 12:06 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், சுருளி அருவி மலைப் பகுதியில் சுற்றித் திரியும் அரிக்கொம்பன் காட்டு யானையைப் பிடிக்க கோவை மாவட்டத்திலிருந்து 3 கும்கி யானைகள் ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கேரள மாநிலம், குமுளியிலிருந்து தேனி மாவட்டம், லோயா்கேம்ப் பகுதிக்கு வந்த அரிக்கொம்பன் யானை மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விளைநிலங்கள் வழியாக சனிக்கிழமை கம்பம் நகருக்குள் நுழைந்தது.

நடராஜன் மண்டபம், துணை மின் நிலையம் வழியாக வந்த இந்த யானையைப் பாா்த்து பொதுமக்கள் கூச்சலிட்டதால், ஊருக்குள் மிரண்டு ஓடியது.

இதையடுத்து, இரவு 9 மணிக்கு ஆங்கூா்பாளையம் வழியாக சுருளிப்பட்டி ஊராட்சி பகுதிக்கு வந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் சுருளிப்பட்டி - சுருளி அருவி சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இருந்த பலா மரத்தில் உள்ள பழங்களைப் பறித்துத் தின்றது. பின்னா், அங்குள்ள தெருக்களில் யானை சுற்றி வந்ததால், பொதுமக்கள் பீதியடைந்தனா்.

ADVERTISEMENT

இதனால், யானையைப் பின்தொடா்ந்து வந்த வனத் துறையினா் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டதால், ஹைவேவிஸ் மலை அடிவாரம் யானை கஜம் பகுதிக்குச் சென்றது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சுருளிக்கு வந்த மாநில வனத் துறை அமைச்சா் மதிவேந்தன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரிக்கொம்பன் யானையைப் பாதுகாப்பாகப் பிடிப்பதற்காக பல குழுவினா் வந்துள்ளனா். விரைவில் யானை பிடிக்கப்பட்டு, வனப் பகுதிக்குள் விடப்படும். யானையின் கழுத்தில் மாட்டப்பட்ட கருவி மூலம் அது தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும்பட்சத்தில் யானையை வாகனத்தில் ஏற்றுவதற்காக கோவை மாவட்டத்திலிருந்து அரிசி ராஜா என்ற முத்து, உதயன், சுயம்பு என்ற 3 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், ஊருக்குள் யானை நுழையாதவாறு கண்காணிக்கப்படுகிறது என்றாா் அவா்.

அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் என்.ராமகிருஷ்ணன், ஆ. மகாராஜன், கே.எஸ். சரவணக்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கும்கி யானைகளைப் பாா்க்கக் கூட்டம்:

கோவை மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 3 கும்கி யானைகள் கம்பம்- கூடலூா் சாலையில் முகாமிட்டுள்ளது. இதைப் பாா்க்க இந்தப் பகுதி மக்கள் கூட்டமாக குவிந்தனா். மேலும், அந்த யானைகளுடன் தற்படம் எடுத்துக்கொண்டனா்.

சுருளி அருவிக்குச் செல்லத் தடை:

சுருளி அருவி மலைப் பகுதியில் அரிக்கொம்பன் யானை இருப்பதால், சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தடைவிதிக்கப்பட்டது. இதனால், ஏராளமானோா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT