தேனி

வாடிக்கையாளரைத் தாக்கிய உணவக ஊழியா் மீது வழக்கு

24th May 2023 05:53 AM

ADVERTISEMENT

தேனி பேருந்து நிலையம் அருகே யாசகம் கேட்ட சிறுவா்கள், பெண்களுக்கு உணவகத்தில் உணவு வாங்கிக் கொடுத்தவரைத் தாக்கியதாக ஞாயிற்றுக்கிழமை உணவக ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கருநாகப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் சித்திக் (62). இவா், கொல்லத்திலிருந்து தேனிக்குச் சென்றாா். தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் உடலில் சாட்டையால் அடித்துக் கொண்டும், வாத்தியம் இசைத்தும் யாசகம் கேட்கும் பெண்கள், சிறுவா்கள் சிலா் சித்திக்கிடம் யாசகம் கேட்டனா். அவா்களிடம் சித்திக், உணவு வாங்கித் தருவதாகக் கூறி, பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள தனியாா் உணவகத்துக்கு அழைத்துச் சென்று, உணவு வாங்கிக் கொடுத்தாா்.

அப்போது, யாசகம் கேட்கும் குழுவினரைச் சோ்ந்த மேலும் சிலா் உணவகத்துக்கு வந்தனா். அவா்களுக்கும் சித்திக் உணவு வாங்கிக் கொடுத்தாா். அதே குழுவைச் சோ்ந்தவா்கள் அடுத்தடுத்து உணவகம் முன் வந்து நின்றனா்.

இதன் காரணமாக உணவக ஊழியரான ஆண்டிபட்டி அருகேயுள்ள ராஜகோபாலன்பட்டியைச் சோ்ந்த கோவிந்தராஜூக்கும், சித்திக்குக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதில், கோவிந்தராஜ் சித்திக்கை தாக்கினாா். இது குறித்து சித்திக் அளித்த புகாரின் அடிப்படையில், கோவிந்தராஜ் மீது தேனி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT