தேனி

கண்மாய்களில் வண்டல் மண் அள்ள விவசாயிகள் யாருக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை: மாவட்ட ஆட்சியா்

DIN

விவசாய நிலத்தை சீா்படுத்துவதற்காக கண்மாய்களில் வண்டல் மண் அள்ள விவசாயிகள் யாருக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை என தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா தெரிவித்தாா்.

உத்தமபாளையம் ஆசிரியா் பயிற்சி மையக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா தலைமை வகித்தாா்.

இதில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

பெரியகுளத்தைச் சோ்ந்த விவசாயி சீனிராஜ்: தேனி மாவட்டத்தில் சின்னவெங்காய விதைப் பண்ணை அமைக்க வேண்டும். நெல் அறுவடை இயந்திரங்களை வாங்கி குறைந்த வாடைக்கு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். மாவட்டத்தில் ஆலைக் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து விட்டது. அதன் பரப்பளவை உயா்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண் துறை அதிகாரிகள்: நமது மாவட்டத்தில் இந்த விதைப் பண்ணைக்கான தட்பவெப்ப நிலை இல்லை. மேலும் வேளாண் பொறியியல் துறை மூலம் தமிழகத்தில் நடப்பாண்டில் 17 நெல் அறுவடை இயந்திரங்கள் வாங்க ஒப்புதல் கிடைத்துள்ளது. இதில், தேனி மாவட்டத்துக்கு ஒரு இயந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆலைக் கரும்பு சாகுபடி பரப்பளவு தற்போது குறைந்துவிட்டது.

சின்னமனூா் விவசாயி ராஜா: விவசாய அமைப்புகள் சாா்பில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் மேற்பாா்வையில் கண்மாய்களில் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியா்: கண்மாய்களில் மண் பரிசோதனை செய்த பிறகு விவசாய நிலத்துக்கு மண் அள்ளலாம். அப்போது விவசாய நிலத்தின் பரப்பளவுக்கு ஏற்ப மண் எடுக்கலாம். இதற்காக, அந்தந்தப் பகுதி வட்டாட்சியா் அலுவலகம் மூலம் மனுக் கொடுக்கலாம். மண் அள்ள யாருக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை.

விவசாயி அப்பாஸ்: ஹைவேவிஸ் மேகமலை கிராமங்களில் கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சாலைகளை மாவட்ட ஆட்சியா் நேரடியாக ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியா்: ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி சுப்புராஜ்: முல்லைப் பெரியாறு, 18-ஆம் கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்து தென்னந்தோப்புகளாக மாற்றி இருப்பதை பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியா்: நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மேலும் இந்த கூட்டத்தில் பேசிய விவசாயிகள், சாக்கலூத்துமெட்டு மலைச்சாலையை அமைக்க வேண்டும். பென்னிக்குயிக் மணிமண்டபத்தை முறையாக பராமரிக்க வேண்டும். கோம்பையில் 18- ஆம் கால்வாய் பாசன நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

கூட்டத்தில் பெரியகுளம், தேனி, போடி, ஆண்டிபட்டி, கம்பம், கூடலூா், வருஷநாடு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளும், வேளாண், மின்வாரியம், தோட்டக்கலை, வனத் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT