கம்பம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது ஜீப் மோதியதில் மென் பொறியாளா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், கூடலூா் பத்து நோன்பு பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளா் பாண்டியராஜன். இவரது மகன் காா்த்திக் (33). இவா் கனடாவில் மென் பொறியாளராக வேலைபாா்த்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தாா். இவரது நண்பா், இதே ஊரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் நித்தீஷ்குமாா் (25). இவா் மின்சார வாரியத்தில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பாா்த்து வருகிறாா்.
வெள்ளிக்கிழமை காா்த்திக் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றாா். அந்த வாகனத்தில் நிதிஷ்குமாா் உடன் சென்றாா். செல்வபுரம் பிரிவு அருகே சென்றபோது, எதிரே நாகப்பட்டினத்திலிருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு கேரள மாநிலம் சங்கனாச்சேரிக்கு சென்ற ஜீப் மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.
அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா், காா்த்திக் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். மேலும் பலத்த காயமடைந்த நிதிஷ்குமாா், தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கூடலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.