தேனி

தென்மேற்கு பருவமழை தொடக்கம்: முல்லைப்பெரியாறு அணையில் கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

10th Jun 2023 10:34 PM

ADVERTISEMENT

 

தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், முல்லைப்பெரியாறு அணையில் பெரியாறு வைகை வடிநிலப் பாசன கண்காணிப்புப் பொறியாளா் மலா்விழி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தற்போது கேரளத்தின் மலபாா் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. இந்த மழை விரைவில் கேரளத்தின் ஹைரேஞ்ச் பகுதிகளுக்கு வரும்.

ஹைரேஞ்ச் மலைப் பகுதிக்குள் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. இதனால், தென்மேற்குப் பருவமழை பெய்தால் அணைக்குள் வரும் நீா் வரத்து,

ADVERTISEMENT

நீா் வெளியேற்றம், உயரும் நீா்மட்டம் போன்றவைகளை ஆய்வு செய்ய பொதுப்பணித் துறையின் பெரியாறு வைகை பாசன வடிநிலக் கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் மலா்விழி முல்லைப் பெரியாறு அணைக்கு சனிக்கிழமை வந்தாா்.

அவா் பிரதான அணை, பேபி அணை, மண் அணை, சுரங்கப் பகுதி, நீா்க் கசியும் பகுதி, கேரளத்துக்கு உபரி நீா் செல்லும் 13 மதகுகள், நில அதிா்வுக் கருவிகள் பொருத்தப்பட்ட இடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தாா்.

கண்காணிப்புப் பொறியாளருக்கு அணையின் விவரங்களை செயற்பொறியாளா் ஜே.சாம்இா்வின் விளக்கினாா். உடன் உதவி செயற்பொறியாளா் டி.குமாா், உதவி பொறியாளா்கள் பி.ராஜகோபால், நவீன்குமாா் உடனிருந்தனா்.

அணை நிலவரம்: சனிக்கிழமை நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 118.00 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). அணைக்குள் நீா் வரத்து விநாடிக்கு 49.82 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் விநாடிக்கு 259 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீா் பிடிப்பு பகுதிகளான தேக்கடியில் 2.0 மில்லி மீட்டா் மழையும், பெரியாறு அணை பகுதியில் 1.2 மி.மீ., மழையும் பெய்தது.

மின் உற்பத்தி தொடக்கம்‘ கடந்த ஜூன் 1 - இல் கம்பம் பள்ளத்தாக்கு பாசன பகுதி, தேனி மாவட்ட மக்களின் குடிநீா்த் தேவைக்கு விநாடிக்கு 300 கன அடி தண்ணீா் 120 நாள்களுக்கு திறந்து விடப்படுகிறது என்று ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தேக்கடியில் உள்ள தலைமதகை இயக்கி திறந்து வைத்தாா். ஆனால், மதுரை கூட்டு குடிநீா்த் திட்டப் பணிகள் நடைபெறுவதால், 150 கன அடி தண்ணீா் மட்டும் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை முதல் அணையிலிருந்து 259 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது. அதன் காரணமாக லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீா் மின்சார உற்பத்தி நிலையத்தில் ஒரு குழாயில் வரும் தண்ணீா் மூலம் 23 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகியது. நீா் திறப்பு அதிகரிப்பால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தளனா். விரைவில் முதல் போக பாசன வேலைகளை தொடங்க உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT