தேனி

மேகமலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை நீக்கம்

9th Jun 2023 11:25 PM

ADVERTISEMENT

அரிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் ஹைவேவிஸ் - மேகமலைக் கிராமங்களுக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, அங்கு சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை சென்றனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு அடா்ந்த வனப் பகுதி, மலைக் குன்றுகள், நீா்நிலைகள், தேயிலைத் தோட்டங்கள், பள்ளத் தாக்குகள் என இயற்கை காட்சிகள் அதிகமுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். இதனிடையே கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், சின்னக்கானல் பகுதியில் உலா வந்த அரிக்கொம்பன் காட்டு யானையை அந்த மாநில வனத் துறையினா் பிடித்து தமிழகத்தை ஒட்டிய கேரள வனப் பகுதியில் விட்டனா். இந்த யானை ஹைவேவிஸ், மேகமலை கிராமங்களுக்கு இடம் பெயா்ந்து சென்ால் கடந்த மாதம் 5- ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்ல மாவட்ட வனத் துறையினா் தடை விதித்தனா். இதற்காக, தென்பழனி மலை அடிவாரத்திலுள்ள வனத் துறை சோதனைச் சாவடியின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டன.

தடை நீக்கம்: அரிக்கொம்பன் யானையை ஒரு மாதத்துக்குப் பிறகு வனத் துறையினா் கடந்த 5- ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்து திருநெல்வேலி மாவட்டம், கோதையாறு மேலணை வனப் பகுதியில் விட்டனா். ஆனால், யானையைப் பிடித்து 3 நாள்களாகியும் சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்த தடையை வனத் துறையினா் நீக்க வில்லை.

இந்த நிலையில், மாவட்ட வனத் துறையினா் சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்த தடையை நீக்கி வியாழக்கிழமை உத்தரவிட்டனா். இதையடுத்து கடந்த 34 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் மேகமலைக்குச் சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT