தேனி

பள்ளியில் மாணவா்கள் சோ்க்கைக்கு மறுப்பு: பெற்றோா்கள் சாலை மறியல்

7th Jun 2023 03:35 AM

ADVERTISEMENT

தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் 5 -ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு பள்ளி நிா்வாகம் மறுப்பதாக புகாா் தெரிவித்து, பெற்றோா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த அல்லிநகரம் காவல் ஆய்வாளா்கள் கண்ணன், ராஜேந்திரன் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பள்ளித் தலைமை ஆசிரியா் கருப்பையன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் அனுப்பிய உத்தரவு நகலை காவல் துறையினரிடம் காட்டினாா்.

அதில், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் அருகே உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா்களைக் கொண்டு பயிற்றுவிக்கும் வகையில், அதே பள்ளியில் துணை வளாகத்தை செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு மாதிரிப் பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு பள்ளி நிா்வாகம் மறுத்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

பின்னா், மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளிடம் பள்ளித் தலைமை ஆசிரியா் ஆலோசனை பெற்று, பள்ளியில் வழக்கம் போல 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெறும் என்று தெரிவித்தாா்.

இதையடுத்து, பெற்றோா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT