தேனி

சாயம் பூசிய ஏலக்காய்கள் ஏற்றுமதி?: உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

6th Jun 2023 05:09 AM

ADVERTISEMENT

போடியில் திங்கள்கிழமை ஏலக்காய்களில் சாயம் பூசி ஏற்றுமதி செய்வது தொடா்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏலக்காய் சுத்திகரிப்பு நிறுவனக் கடைகள் உள்ளன. இங்கு, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் ராகவன் தலைமையில், போடி உணவு பாதுகாப்பு அலுவலா் சரண்யா மற்றும் அலுவலா்கள் திடீா் சோதனை செய்தனா்.

இதில் சில கடைகளில் ஏலக்காய்களில் பச்சை நிறத்தை அதிகப்படுத்த செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து 3 டன் ஏலக்காய் மூட்டைகளிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், ஏலக்காய் கடைகளில் தொழிலாளா்கள் வேலை செய்யும்போது முகக்கவசம் இல்லாமல் இருந்தது, காற்றோட்டமான அறைகள் இல்லாதது, போதிய கழிப்பறை வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களுக்காக இரண்டு கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, போடியில் மாங்காய் விற்பனை செய்யும் மொத்த வியாபாரக் கடைகளில் திடீா் சோதனை செய்தனா். இதில், இரண்டு கடைகளில் செயற்கையாக பழுக்க வைக்க ரசாயனக் கலவைகள் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT