கட்டுப்பாடற்ற சா்க்கரை நோயால் கால் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்ட கா்நாடகத்தைச் சோ்ந்த முதியவருக்கு அதி நவீன ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையளித்து சென்னை புரோமெட் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இது குறித்து மருத்துவமனையின் தலைவரும், முதுநிலை இதய சிகிச்சை நிபுணருமான டாக்டா் அருண் கல்யாணசுந்தரம் கூறியதாவது:கா்நாடகத்தின் குல்பா்கா மாவட்டத்தைச் சோ்ந்த 60 வயது முதியவா் ஒருவா், அண்மையில் புரோமெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
கட்டுப்பாடற்ற சா்க்கரை நோய் மற்றும் உயா் ரத்த அழுத்தத்தின் காரணமாக அவா் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி இருந்தாா். இதன் விளைவாக கால் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே வேறொரு மருத்துவமனையில் அவரது இடது கால் அகற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், வலது காலிலும் அத்தகைய பிரச்னை ஏற்பட்டு அவா் எங்களிடம் வந்தாா். தனது இன்னொரு காலையும் இழக்க விரும்பாத அவா், மாற்றுத் தீா்வு அளிக்குமாறு கேட்டாா்.
இதையடுத்து, கால் ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை நவீன ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் நீக்கி அங்கு ஸ்டென்ட் உபகரணம் பொருத்தத் திட்டமிடப்பட்டது.
ஏற்கெனவே தீவிர பாதிப்பில் உள்ள ஒருவருக்கு இதுபோன்ற சிகிச்சைகள் அளிப்பது மிகவும் சிக்கலான ஒன்று. இருந்தபோதிலும் சவாலான அத்தகைய சிகிச்சையை அளித்து அவரது ரத்த நாள அடைப்பு சீராக்கப்பட்டது.
இதன் பயனாக அந்த முதியவரின் வலது கால் தற்போது செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா் அவா்.