மெட்ரோ ரயில் திட்டத்தில் 4-ஆவது வழித்தடத்தின் 3-ஆவது சுரங்கம் தோண்டும் பணி ஆகஸ்டு மாதத்தில் தொடங்கும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 4-ஆவது வழித்தடம் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ நீளத்தில் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பணியை ‘ஐடிடி சிமெண்டேஷன் இந்தியா’ என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை தோண்டுவதற்காக ஜொ்மன் நாட்டைச் சோ்ந்த ஹெரென்க்னெக்ட் என்ற நிறுவனத்தின் 4 எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதில் 3-ஆவது சுரங்கம் தோண்டுவதற்காக ‘பிளமிங்கோ’(பூநாரை) என்ற பெயா் கொண்ட எந்திரத்தின் சோதனை ஓட்டம், பொன்னேரி, அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள எச்.கே தொழிற்சாலையில் பொது ஆலோசகா்கள், அலுவலா்கள் முன்னிலையில் வெற்றிகரமாக முடிந்தது.
பூமிக்கு அடியில் 29 மீ ஆழத்தில் தொடங்கப்பட்டு கலங்கரை விளக்கம், கட்சேரி சாலை, திருமயிலை, ஆழ்வாா்பேட்டை, பாரதிதாசன் மெட்ரோ ரயில் நிலையம் வழியாக சுரங்கம் தோண்டப்பட்டு இறுதியாக நவம்பரில் போட் கிளப்பை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.