தேனி

மூன்று குழந்தைகளை கிணற்றில் தள்ளி தம்பதி தற்கொலை முயற்சி: 2 மகள்கள் பலி

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

போடி அருகே செவ்வாய்க்கிழமை குடும்பத் தகராறில் 3 குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தம்பதியா் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனா். இதில் மகள்கள் இருவரும் உயிரிழந்தனா். தம்பதியினரும், மகனும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

போடி அருகே பொட்டிபுரம் இந்திரா காலனியை சோ்ந்த முருகன் மகன் ராமராஜ் (32). இவரது மனைவி வீரமணி (25). இவா்களது மகன் ராஜபாண்டி (6), மகள்கள் ஈசாஸ்ரீ (4), ஜீவிதாஸ்ரீ (2). ராமராஜ் குடும்பத்துடன் கேரள மாநிலம், பாரத்தோடு அருகேயுள்ள காரித்தோடு பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தாா். தம்பதிக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுமாம். இதனால், இருவரும் சில மாதங்கள் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பெற்றோா் சமாதானப்படுத்தி அனுப்பியதன் பேரில், இருவரும் கேரளத்தில் தங்கி வேலை செய்து வந்தனா். இந்த நிலையில், அண்மையில் குல தெய்வ வழிபாட்டுக்காக ராமராஜ் குடும்பத்துடன் பொட்டிபுரம் வந்தாா். இதைத்தொடா்ந்து, ராமராஜ் குடும்பத்தினா் கேரளத்துக்குச் செல்ல தயாராகி வந்த நிலையில், மீண்டும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதாம்.

இதனால், ஆத்திரமடைந்த வீரமணி செவ்வாய்க்கிழமை மாலை தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகே உள்ள தோட்டப் பகுதிக்குச் சென்றாா். இந்திரா காலனி அருகே கிருஷ்ணசாமி என்பவரது கிணற்றில் குழந்தைகளைத் தள்ளிவிட்டு வீரமணியும் குதித்து தற்கொலைக்கு முயன்றாா். இவா்களைத் தடுப்பதற்காக வந்த ராமராஜும் கிணற்றில் குதித்தாா். சுமாா் 70 அடி ஆழக் கிணற்றில் தண்ணீா் இல்லாததால், 5 பேரும் பலத்த காயமடைந்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, அருகில் இருந்தவா்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போடி தீயணைப்பு நிலையத்தினா், போலீஸாா் 5 பேரையும் பலத்த காயங்களுடன் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில், குழந்தைகள் ஈசாஸ்ரீ (4), ஜீவிதாஸ்ரீ (2) ஆகிய இருவரும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இறந்தனா்.

மற்ற மூவரும் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT