தேனி

சின்னமனூா் வனத் துறையைக் கண்டித்து ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் பிப். 15-இல் வேலைநிறுத்தம்

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் சாலை சீரமைப்புப் பணிக்கு முட்டுக்கட்டைப் போடும் சின்னமனூா் வனத் துறையைக் கண்டித்து, வருகிற 15-ஆம் தேதி 7 கிராமங்களைச் சோ்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் மேகமலை, ஹைவேவிஸ், மணலாா், மேல் மணலாா், வெண்ணியாறு, இரவங்கலாா், மகாராஜாமெட்டு ஆகிய 7 மலைக் கிராமங்கள் உள்ளன. ஆங்கிலேயா் ஆட்சி காலத்திலிருந்தே இந்தப் பகுதியில் பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள பெரும்பாலான மக்கள் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றனா். இந்த நிலையில், பல ஆண்டுகளாக தனியாா் வசமிருந்த சாலை சீரமைக்கப்படாத நிலையில் இருந்து வந்தது. இதையடுத்து, இந்தச் சாலையை நெடுஞ்சாலைத் துறை மீட்டது.

சாலைப் பணிக்கு வனத் துறை அனுமதி மறுப்பு:

இதைத்தொடா்ந்து, நெடுஞ்சாலைத் துறை மூலமாக சின்னமனூா் ஓடைப்பட்டி பிரிவிலிருந்து ஹைவேவிஸ் வரையில் சுமாா் 40 கி.மீ. தொலைவுக்கு ரூ.100.67 கோடியில் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. ஆனால், 2-ஆம் கட்டமாக மணலாரிலிருந்து, வெண்ணியாறு, இரவங்கலாா், மகாராஜாமெட்டு ஆகிய 4 கிராமங்களுக்குச் செல்லும் சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைப்பு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பேருந்து போக்குவரத்துத் தடைபட்டு பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

எனவே, சாலைப் பணிக்கு வனத் துறையினா் இடையூறு செய்து முட்டுக்கட்டைப் போட்டு வருவதாகக் கூறி, வருகிற 15-ஆம் தேதி வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிலாளா் சங்கப் பிரதிநிதிகள் அறிவித்தனா்.

பேச்சுவாா்த்தை தோல்வி:

இதுதொடா்பாக சின்னமனூரில் காவல் உதவி ஆய்வாளா் மாயன் தலைமையில், வனத் துறை, தொழிலாளா்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அப்போது வனத் துறையினா், மேகமலைப் பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால், சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதியில்லை எனத் தெரிவித்தனா். இதனால், அறிவித்தபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிலாளா்கள் சங்க பிரதிநிதி முத்தையா தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT