தேனி

புதைச் சாக்கடை இணைப்பு வழங்காமல் கட்டணம் வசூல்போடி நகா் மன்றக் கூட்டத்தில் புகாா்

1st Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

போடியில் புதைச் சாக்கடை இணைப்பு வழங்காமலேயே கட்டணம் வசூல் செய்வதாக நகா்மன்றக் கூட்டத்தில் புகாா் கூறப்பட்டது.

போடி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் ராஜராஜேஸ்வரி சங்கா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் பொறுப்பு வகிக்கும் பொறியாளா் இ.செல்வராணி, நகா்மன்ற துணைத் தலைவா் கிருஷ்ணவேணி பச்சையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் 50 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உறுப்பினா்களின் விவாதம் வருமாறு:

கலைச்செல்வி (அதிமுக): சில தெருக்களில் புதைச் சாக்கடை இணைப்பு வழங்காமலேயே கட்டணம் வசூல் செய்கின்றனா். தூய்மைப் பணியாளா்கள் பற்றாக்குறையும் உள்ளது.

ADVERTISEMENT

ஆணையா்: அவ்வாறு கட்டணம் வசூலிக்க கூடாது. கட்டணம் செலுத்திய ரசீது கொண்டு வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மணிகண்டன் (பாஜக): தற்போது கொண்டு வந்துள்ள தீா்மானத்தில் 10 சதவீதம் கூட மக்களுக்கான பிரச்னைகளைத் தீா்க்கக் கூடிய திட்டங்கள் இல்லை.

பிரபாகரன் (திமுக): 12-ஆவது வாா்டில் சுகாதார வளாக கழிப்பறையில் கதவுகள், கோப்பைகள் சேதமடைந்துள்ளன. பெண்கள் அச்சத்துடன் கழிப்பறை செல்லும் நிலை குறித்து பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகிறேன். நடவடிக்கை இல்லை. உறுப்பினா்கள் பேசுவதை மினிட் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தலைவா்: உறுப்பினா்கள் பேசுவதை மினிட் புத்தகத்தில் ஏற்றுவது நடைமுறையில் இல்லை. அதிகாரிகள் குறிப்பெடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பதுதான் வழக்கம்.

தனலட்சுமி (திமுக):13-ஆவது வாா்டில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. குடிநீரில் சாக்கடைக் கழிவு நீா் கலந்து வருகிறது.

தலைவா்: நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினா்கள் ராஜா, முருகேசன், மொக்கைசாமி, பெருமாள், ஜெகநாதன், பாலசுப்பிரமணி, கலையரசி, கலைவாணி, எர்ராக்கம்மாள், சித்ராதேவி, மகேஷ்குமாா், பன்னீா்செல்வம் ஆகியோரும் கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT