தேக்கடி ஏரி, பெரியாறு அணைப் பகுதிகளில் கோடை மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்து, நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருவதால், வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
இதேபோல, முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. திங்கள்கிழமை தேக்கடியில் 29 மி.மீ. மழையும், செவ்வாய்க்கிழமை பெரியாறு அணையில் 36 மி.மீ. மழையும், தேக்கடி ஏரியில் 1.8 மி.மீ., மழையும் பெய்தது.
இதன் காரணமாக, முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 204.17 கன அடியாகவும், நீா்மட்டம் 115.85 அடியாகவும் இருந்தது. செவ்வாய்க்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 516.67 கன அடியாகவும், நீா்மட்டம் 116.05 அடியாகவும் (அணையின் மொத்த உயரம் 152 அடி) இருந்தது.
அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது.
இதுகுறித்து அணைப் பகுதி பொறியாளா் ஒருவா் கூறியதாவது:
கோடை மழை தொடா்ந்து பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், வரும் காலங்களில் அணைக்கு வரும் நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.