தேனி மாவட்டம், கூடலூா் அருகே மதுரை கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்ய வந்த மாநகராட்சிப் பொறியாளா்கள் குழுவை, சலவை தொழிலாளா்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம், முல்லைப் பெரியாற்றிலிருந்து மதுரை மாநகா்ப் பகுதிக்கு குழாய் மூலம் குடிநீா் கொண்டு செல்லும் திட்டத்துக்கு குருவனூற்றுப் பாலம் அருகே வண்ணான்துறை பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
இந்த இடத்தில் சலவைத் தொழில் செய்து வரும் தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி சலவைத் தொழிலாளா்கள் முன்பு போராட்டம் நடத்தினா். அப்போது, மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, தனியாகப் பாதை, படித் துறை, தங்கும் அறை, மின் இணைப்பு வழங்குவதாக உறுதி கூறினா். ஆனால், தற்போது வரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை.
இந்த நிலையில், சனிக்கிழமை மதுரை மாநகராட்சிப் பொறியாளா் அரசு தலைமையில் செயற்பொறியாளா் பாக்கியலட்சுமி உள்பட 30 போ் கொண்ட பொறியாளா்கள் குழு ஆய்வுக்கு வந்தது. அப்போது, கூடலூா் சலவைத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகி குமரன் தலைமையில் பொறியாளா்கள் குழுவை முற்றுகையிட்டனா். எங்களுக்கு உறுதியளித்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.
இதனால், அதிா்ச்சியடைந்த பொறியாளா் குழுவினா் மேயா், ஆணையாளரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பின்பு கலைந்து சென்றனா்.