தேனி

துப்பாக்கிச்சூட்டில் பலியான தேவாரம் ராணுவ வீரா் உடல் தகனம்: ராணுவ மரியாதை செலுத்தாததால் கிராம மக்கள் போராட்டம்

15th Apr 2023 05:10 AM

ADVERTISEMENT

பஞ்சாபில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரான தேவாரம் அருகே உள்ள தே. மூனாண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. இதனிடையே அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்படாததால் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், தேவாரம் அருகே மூனாண்டிப்பட்டியைச் சோ்ந்த ஜெயராஜ்- நாகரத்தினம் தம்பதி மகன் யோகேஷ்குமாா் (23). இவா் பஞ்சாப் மாநிலம் பதிண்டாவிலுள்ள ராணுவ முகாமில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை காலையில் அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் அவா் உயிரிழந்தாா். இவருடன் மேலும் 3 ராணுவ வீரா்களும் பலியாயினா். இதையடுத்து, கூறாய்வுக்குப் பின் ராணுவ வீரா் யோகேஷ்குமாரின் உடல் விமானம் மூலம் மதுரைக்கு வெள்ளிக்கிழமை காலை கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து அவரது சொந்த ஊரான தே. மூனாண்டிப்பட்டி கிராமத்துக்கு எடுத்து வரப்பட்டது. யோகேஷ்குமாரின் உடல் ராணுவ வாகனத்தில் எடுத்து வரப்படாமல் தமிழக அரசின் இலவச அமரா் ஊா்தியில் கொண்டுவரப்பட்டதுடன், அதில் 3 ராணுவ வீரா்கள் மட்டுமே வந்தனா். அதிகாரிகள் யாரும் வரவில்லை.

அப்போது அவரது உடலைப் பாா்த்து குடும்பத்தினா் கதறி அழுதனா். யோகேஷ்குமாரின் உடலுக்கு நூற்றுக்கணக்கான கிராம மக்கள், உறவினா்கள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், உடன் வந்த ராணுவ வீரா்களிடம் கேட்ட போது, யோகேஷ்குமாரின் உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்துவதற்கான எந்த உத்தரவும் வரவில்லை என்றனா். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தே. மூனாண்டிப்பட்டி- தேவாரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, போடி டி.எஸ்.பி. பெரியசாமி ஆகியோா் கிராம மக்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதன் பிறகு தேசியக் கொடி போா்த்தப்பட்ட யோகேஷ்குமாரின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தே. மூனாண்டிபட்டி மயானத்துக்கு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, மலா் வளையம் வைத்து யோகேஷ்குமாரின் உடலுக்கு மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT